நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா?
நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா?
இப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா? விளக்கம் தரவும்.
நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.
நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள் என்றார்கள்.
உடனே அவர், அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா? என்றார். அதற்கு அவர்கள், நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை என்றார்கள்.
அடுத்து, ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா? என்றார். அதற்கு அவர்கள், நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை; என்றார்கள்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா? என்றார். அதற்கு அவர்கள் நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை என்றார்கள்.
உடனே அம்மனிதர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 46, 1891, 2678, 6956
இந்த ஹதீஸில் கடமையைத் தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது.
எனினும் கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அதை அவன் நிறைவாகச் செய்திருந்தால் (அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.) அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 463
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கி இருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன்.
நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.
(ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6502
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவும் அமைந்துள்ளன.
எனவே கடமையான தொழுகைகளுடன் இயன்ற வரை உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
Comments
Post a Comment